எண்ணம்

எண்ணத்தின் நிலைகள் 

எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப்போகும்
எண்ணத்தின் நிலைக்காட்ட முடிவதில்லை
இல்லை என்று சொல்லவும் யாரும் இல்லை
எண்ணம் எழும் இடமோஓர் புள்ளியாகும்
இயங்கிமுடியும் அளவோ, அகண்டகாரம்
எண்ணமே செயற்கைக் கருவிகளனைத்தினோடு
இயற்கைக் கருவிகளையெலாம் இயக்கும் சக்தி.



எண்ணத்தின் சிறப்பு

எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்திற்கும் மூல மாகும்
இன்பதுன்பம், விருப்புவெறுப் புயர்வு தாழ்வு
எண்ணத்தின் நாடகமே; பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்று மில்லை.



 எண்ணம் நற்பயனாக 

எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால்,
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்.
எண்ணமது எழும்போதே இது ஏன் என்று
எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலபமாக
எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்
எழும் எண்ணம்  யாவும் நற்பயனைய் மாறும்.



                                                                 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி