வேதாத்திரி மகரிஷி





தத்துவஞானி  வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு பிறந்தார். மிகவும் எளிய நெசவாளிக் குடும்பத்தைச் சார்ந்த அவருக்குக்  "கடவுள் யார் ? " " உயிர் என்றால் என்ன ? " "வறுமை ஏன் ஏற்படுகிறது ? " என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்ற உள்ள எழுச்சி சிறு வயதிலேயே இருந்தது.


சுயமுயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர், தியான முறைகளில் சிறந்ததான எளியமுறைக் குண்டலினி யோகத்தினை உருவாக்கிப் பிறருக்கும் கற்பித்து வரலானார். உயிர்ச் சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப் போடுகின்ற சித்தர்கள் கண்ட நெறியான காயாகல்ப யோகத்தினையும் தெளிவுபடுத்தி போதித்தார். அத்துடன் சிறிய வயதுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர் வரை அனைவரும் பயின்று பயன்பெறக்கூடிய எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றினையும் உருவாக்கி மக்களுக்குக் கற்பித்து வந்தார்.


1958 - ஆம் ஆண்டில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று  இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலேசிய, கொரியா, சிங்கப்பூர் ஆகிய 22 நாடுகளில் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மை மேற்கொண்ட மகரிஷி அவர்கள் இறுதி வரையிலும் உலக சமாதானத்திற்க்காக அயராது சேவை ஆற்றினார். பல வருடங்களாக வெளிநாடுகளுக்கும் சென்று ஆன்மிகப் பணியாற்றி உள்ளார். தத்துவத்திலே அத்வைதத்தையும், யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களும் உணர்ந்து கொள்கின்ற வகையிலே, அவர் கற்பிக்கின்ற முறையில் இவரது உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால் பாமர மக்களின் தத்துவஞானி  என்று போற்றப்பட்டார்.