வாழ்வின் நோக்கம்

எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். ஆனால் இன்று மனிதனின் வாழ்க்கையில் இன்பம் நிறைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு எல்லோருக்குமே விடை தெரியும்.

வாழும் முறையானது வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக அமையும் பொது துன்பந்தான் வரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். அன்றாட நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்கு ஏற்பவே அமைத்துக் கொண்டாக வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சி இயல்பாகவே மலரவேண்டும்.

நாம் தவறுகள் செய்கிறோம். செய்த தவறுகளே துன்பமாக விளைகின்றன. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு  வந்தபின் இனித் துன்பம் வராமல் இருக்க வேண்டுமானால் இனியேனும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வரவேண்டும். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே  தவறுகள் செய்யப்படுகின்றன. சூழ்நிலை நிர்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளும் மிகுதியே. புலன் கவர்ச்சியில் இருக்கும் போது, சூழ்நிலைக்  கவர்ச்சியில் நிற்கும் போதும், பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும் போதும் தவறுகள் தெரிவதில்லை. அதனால் மேலும் மேலும் புலன் கவர்ச்சியில் சிக்குகின்றோம்; சூழ்நிலைக் கவர்ச்சிக்கு ஆளாகிறோம். அதனால் மேலும் மேலும் தவறிழைத்துத் துன்பத்தையே சந்தித்தித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வந்த வேலை பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. பேராசை, சினம் முதலான ஆறு குணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. விளைவாக, பஞ்சகமா பாதகங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன ஐந்து பெரும் பழிச் செயல்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம். இறைவனைப் பற்றிய எண்ணம் மறைந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப்பயிற்சியின்றி முடியவேமுடியாது. ஏனெனில், தவறிழைப்பதும் மனம். இனித் தவறு செய்து விடக் கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே, மனதைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய வழியில் செல்ல முடியாது.

மனதின் குறைகளைப் போக்கியாக வேண்டும். நல்வழியில் தீர்மானமாக நிற்கும் சுயபலத்தை மனதிற்கு ஊட்டியாக வேண்டும். அதை யார் செய்வது? வேறு யார் இங்கே இருக்கிறார்கள்? மனம் தான் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். மனம் தன்னை உயர்த்திக் கொண்டால் இன்பம், இடையறா இன்பம். மனதைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதினிடம் தான் இருக்கிறது. மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான  இறைநிலையை எய்தினால், அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே. இந்த அற்புதத்தைத் தான் மனவளக்கலையால் சாதிக்கின்றோம்.

மனவளக்கலை வெறும் யோகம் மட்டும் இல்லை. மனமாக இருப்பது எது எனத் தெரிந்து கொள்கிறோம். நாம் எதனுடைய ஓர் அங்கமாக இருக்கிறோமோ, அந்த இயற்கையைக் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் எந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டு வாழ்கிறோமோ அந்தச் சமுதாயத்தைப் பற்றியும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்கிறோம் .

மனம், இயற்கை, சமுதாயம் என்ற மூன்று கோடுகளுக்குள் முக்கோணத்துக்குள்  தான் - மனிதன் வாழ்ந்தாக வேண்டும். இயற்கையோ மாற்றப்பட முடியாதது. அதனை மனம் அறிந்து மதிக்கும் அளவில் தான் மனதிற்கு உயர்வு கிடைக்கும். சமுதாயமோ இயற்கையை ஒட்டிய சில விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சமுதாய வளத்தையும், சமுதாய ஒழுங்கையும் பாதுகாத்துப் பயனாகிய இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதையெல்லாம்  விட முக்கியமாக மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனெனில், எல்லாமே  மனதிற்குள் தான் இருக்கின்றன. எல்லாமே மனதிற்குள் இருந்து தான் வர வேண்டும். மனதின் மகத்துவத்தை உணராதவர் அறிவில்லாதவர்களே. அவர்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் துன்பம் விளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இன்பமும், அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள்.