Sunday, October 6, 2019

வாழ்க வையகம்          வாழ்க வளமுடன்

அறிவு என்பது அறியப்படுவது 

ஞானம்  என்பது உணரப்படுவது 

 

இறை  வணக்கம்  


அழுத்தம் எனும் உந்து ஆற்றல் ஒன்றைக்கொண்டே 

அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி

வழுத்துமோர்  அறிவுமுதல் ஐந்தும் ஆறும் 

வகைவகையாய் உயிரினங்கள் தோற்று வித்து 

முழுத்திறனுடன் காத்து முடிக்கும் மேலாம்

முழுமுதற்  பொருளே நம்மறிவாய் ஆற்றும் 

பழுத்தநிலை வரும் வரையில் " நீ"  " நான்"  என்போம் 

பதமடைந்தோம்  ஒன்றானோம் பரமானந்தம்

 

 

குரு வணக்கம் 

 

தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து 

தழைத்தொரு உடலாகி  உலகில் வந்தேன் 

அந்த ஈருயிர்கள் வினைகள் அறமோ மற்றொ 

அளித்த பதிவுகளேல்லாம் என் சொத்தாச்சு 

இந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து 

எல்லையில்லா மெய்பொருளை அடைவதற்கு 

வந்த ஒரு உதவி உயிரின் சேர்க்கை 

வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம் 

 

மனிதனின் தொடக்கம் ஒரே தாய் தந்தை மூலம் ஏற்பட்டுள்ளது. அது பல லட்சம் தலைமுறைகளாகப்  பெருகி பல நாடுகளில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாக உள்ளது. காலத்தாலும் இடத்தாலும் அவ்வப்போதைய தேவையாலும், எழுந்த செயல்களாலும் சாதி, மத, மொழி,  இன, தொழில் வேறுபாடுகளாலும் மனித இனத்தில் பல பிரிவுகளாகத் தோன்றியுள்ள குழு உணர்வில் கருத்து வேறுபாடு எழுந்த போது வன்முறைச் செயல்களும், பிணக்கும், பகையும், போர்களும் தோன்றி மனித சமுதாயத்தில் ஆன்மீக வளமும், ஒற்றுமையுணர்வும் குன்றி விட்டன. காந்த தத்துவத்தின் மூலம் மனிதன் அவன் முழுமையான சரித்திரத்தையும் இயற்கையமைப்பு, இயக்கம், விளைவு இவைகளையும் உணர்ந்து கொள்வான் அந்த அறிவு நிலையில் மனிதன் பழக்கத்தாலும், குறுகிய அறிவு நிலையாலும் கொண்டுள்ள எல்லா வேறுபாடுகளையும் கடந்து அறிவில் உயர்ந்து விடுவான்.  அத்தகைய அறிவின் உயர்வில், நாடு, மொழி, மத, இன, சாதி வேறுபாடுகளையும் கடந்து பொருள் துறையில் சமநிலை பெற்று அன்போடும் பண்போடும் வாழ்வான். அந்த நிலையை நாடியே மனிதன் அறிவு உலகெங்கும் ஆன்மீக ஒளியை நாடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தக் காந்த தத்துவத்தை வாழ்க்கை விஞ்ஞானமாக கல்விக் கூடங்களின் மூலம் எல்லா மக்களுக்கும் பரவ ஏற்று தொண்டினை ஆன்மீகத் துறையில் தொண்டாற்றுவோர் முக்கியமாகவும் முதன்மையாகவும் ஏற்று செயல் புரிய வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.

                                                                                                                    அருள் தந்தை 

                                                                                                            வேதாத்திரி மகரிஷி