மலரே மலரே



மலர் வழியே விளங்கும்  மறைபொருள்


மலரே மலரே  நீயார் உன் 
மணமும் அழகும் வண்ணமும் என் 
பலவாறான நினைவகற்றிப் 
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.      ( மலரே ) 

இயற்கை அழகை  ரசிக்கும் உன் 
எண்ணம் மிகமிக உயர்ந்துளது 
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு 
செம்மை பெற என் கதை சொல்வேன்   ( மலரே )

மலரே நீயார் எனக் கேட்டாய் 
மறை  பொருளான தெய்வமே நான் 
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள்                 ( மலரே )

பரம அணுக்கள் பல கோடி 
பண்பாய்க்  கூடி ஒரு கூத்து 
கரம் கோத்தாடும் நாடகத்தோர் 
கட்டம் எந்தத் தோற்றமும் ஆம்               ( மலரே )

இறைவன் என்ற ஆதிபரம் 
எடுத்த பலப்பல கோடி உரு 
நிறைந்த பெரிய மண்டலமே 
நெடிய விரிந்த  பேரண்டம்                          ( மலரே )

பெரிய இயக்க மண்டலமே 
 பிரபஞ்சம் எனும் மேடையிலே 
அரிய உருவ அழகோடு 
ஆடுகிறேன் நான்  அவன்கதையாய்        ( மலரே )

ஆதியின் அசைவே பரம அணு 
அவை  ஒவ்வோர் அளவில் கூட 
வேதம் கூறும்  ஐம்பூதம் 
விண்முதல்  மண்வரை வேறில்லை       ( மலரே )

ஒவ்வொரு பொருளும் பரமுதலாய் 
அவ்வுருவறையில் வந்த கதை 
செவ்விய சிறு சொல் பரிணாமம் 
சிறப்பை உணர்வாய் நீயுமதே                     ( மலரே )

என்னை கண்ணால் பார்மலராய் 
எனதமாய்ப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு 
மூலம் சிவமாம் பிரம்மமதே                        ( மலரே )

உருவம் மலர்தான் உட்பொருளை 
உணர விண்ணெனும் நுண்ணணுவே 
அருவம் ஆதி  அசைந்த நிலை 
அணுகுதல் அகண்ட பேரண்டம்                 ( மலரே )


உன்னை யாரென்றேன் மலரே 
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள் 
பின்னை இந்தப் பேரறிவில் 
பிறழாதிருப்பேன் விழிப்புடனே                 ( மலரே )


ஆறறிவாக வாழ்  மனிதர் 
அதற்கு ஏற்பப் பொருத்தமுள 
பேறு  உண்மைப் பொருளுணர்தல் 
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்        ( மலரே )