தற்சோதனை

நமது வாழ்வில் வரும் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் அனைத்திற்கும் நமது மனமே விளைநிலம் ஆகும். மனத்தின்  உயர்வே மனிதனின் உயர்வு. அத்தகைய மனத்தை அறிய மனம் ஒன்றுதான் கருவி. மனத்தையே உபயோகப்படுத்தி மனத்தை வளப்படுத்தும் வாழ்க்கை நலக் கல்வியை மனவளக்கலை என்ற பெயரில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்  பயிற்சி முறைகளை அளித்துள்ளார்கள்.

எண்ணங்களை ஆராய்வதன் மூலம் அறிவுக்கு விழிப்பு நிலை உண்டாகும். நலம் தீது உணர் ஆற்றல் உண்டாகும். வினைப்பதிவுகளை மாற்ற இயலும்.

ஆசைகளைச் சீரமைப்பதின் மூலம் உடல் நலம், மனவளம், பொருள்வளம், உயர் புகழ், மனநிறைவு உண்டாகும்.

சினத்தைத் தவிர்ப்பதால் வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் ஓங்கும். அனைவரிடமும் நட்பு உண்டாகும். முகம் பொலிவுடன் விளங்கும்.

கவலையை ஒளிப்பதால் அச்சமின்மை, மன அமைதி, உடல் நலம் பெறலாம்.

நான் யார் என்று தெளிவு பெறுவதால் இறைநிலை, பிரபஞ்சம் உடல், உயிர், மனம் இவை குறித்து விளக்கம் கிடைக்கும்.

வாழ்க வளமுடன் என நம்மையும், பிறரையும் வாழ்த்துவதால் நாமும் நலமாக வாழ்ந்து பிறரையும் வளமாக வாழச் செய்யலாம்.

மனவளக்கலையை வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் மனத்தூய்மை, வினைத் தூய்மை பெறலாம் அதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை இவை நமது வாழ்வில் இயல்பாக அமையும்.